சென்னை: சென்னை நங்கநல்லூர் இந்து காலனியில் வசித்து வருபவர் கண்ணன் (56). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது பெரியம்மா வைதேகி (85). அருகில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 20-ம் தேதி இரவு வைதேகி வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது மர்மநபர் ஒருவர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து, அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் செயினை பறித்தார்.
இதையடுத்து வைதேகியின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த பைக்கில் ஏறி கொள்ளையன் தப்பினார்.
இதுகுறித்து, ஆதம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்ததில், வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்து தப்பியது நங்கநல்லூர் தில்லை கங்கா நகரைச் சேர்ந்த குருராஜன் (57) என்பது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில், குருராஜன் அப்பகுதியில் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வந்ததாகவும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், நகை பறிக்க முடிவெடுத்ததாகவும், இளம் பெண்களிடம் நகை பறித்தால் மாட்டிக் கொள்வோம் என நினைத்து, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை நோட்டமிட்டு நகை பறிப்பில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.