சென்னை: ஆயுதப்படை பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக விசிக பிரமுகர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டியிடுகிறார்.
அவர் நேற்று முன்தினம் அயனாவரம் பிரிக்லைன் சாலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு கூட்ட நெரிசலுக்குள் வந்த நபர், பொற்கொடியுடன் புகைப்படம் எடுக்க முயன்றார்.
இதை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை பெண் காவலர் பழனிபாரதி, மற்ற போலீஸார் உதவியோடு அந்த நபரை அப்புறப்படுத்த முயன்றார். உடனே அந்த நபர் பெண் காவலர் பழனிபாரதியை ஆபாசமாகத் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் காவலர், தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
இதில், ஆயுதப்படை பெண் காவலருக்கு மிரட்டல் விடுத்தவர் புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஜேடிஆர் நாகராஜ் என்பதும், அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் வடசென்னை மாவட்ட நிர்வாகியாக இருப்பதும் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.