சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் விசிக தொழிற்சங்க நிர்வாகி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நன்மாறன் (63).
சென்னை துறைமுகத்தில் ஊழியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், விசிகவின் தொழிலாளர் விடுதலை முன்னணி தொழிற்சங்கத்தின் பொதுச்செயலராக உள்ளார்.
இவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலருக்கு வட்டிக்கு கடன் கொடுத்துள்ளார். இவ்வாறு, தன்னிடம் வட்டிக் கடன் பெற்ற பெண் ஒருவருக்கு சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், அண்மையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாருக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.
அதன்படி, போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, நன்மாறன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.