கிணற்றில் கார் பாய்ந்ததில் உயிரிழந்த 4 பேரும், கிரிவலம் சென்றபோது செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம்.

 
க்ரைம்

செஞ்சி அருகே விவசாய கிணற்றில் கார் பாய்ந்து வழக்கறிஞர் உட்பட 4 பேர் உயிரிழப்பு

கிரிவலம் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது சோகம்

இரா.தினேஷ்குமார்

விழுப்புரம்: செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் விவசாய கிணற்றில் கார் பாய்ந்ததில், கிரிவலம் சென்றுவிட்டு வீடு திரும்பிய சென்னை வழக்கறிஞர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

சென்னையை அடுத்த கெருகம்பாக்கம், குன்றத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சேகர் மகன் வினோத்(38), சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவரது நண்பர்கள் சென்னை மவுலிவாக்கத்தைச் சேர்ந்த குமார் மகன் சேகர்(27), கெருகம்பாக்கம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த மணி மகன் ராஜா(45), கோலப்பாக்கம் காந்தி தெருவைச் சேர்ந்தவர் ஆதிகேசவன் மகன் ஜெயமுருகன்(42). இவர்கள் நான்குபேரும், சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு காரில் நேற்று (மார்ச் 2) இரவு சென்றனர்.

பவுர்ணமி கிரிவலம் சென்றுவிட்டு, இன்று (மார்ச் 3) காலை வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை ராஜா என்பவர் ஓட்டி இருக்கிறார். திண்டிவனம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் அருகே ஆலம்பூண்டி என்ற இடத்தில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக கார் ஓடி இருக்கிறது.

அப்போது தடுப்பு கட்டைகள் மீது மோதி, சாலையோரத்தில் இருந்த ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழ விவசாய கிணற்றில் கார் பாய்ந்தது. இக்கிணற்றில் சுமார் 40 அடிக்கு தண்ணீர் இருந்தது. இதனால் கிணற்றில் கார் மூழ்கியது. இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சத்தியமங்கலம் போலீஸார் மற்றும் செஞ்சி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, கிணற்றில் மூழ்கிய காரில், கயிற்றை கட்டி மீட்கும் பணி தொடங்கியது.

சுமார் இரண்டரை மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு, கார் மீட்கப்பட்டது. அப்போது காரிலேயே உயிரிழந்த நிலையில் வினோத், சேகர், ராஜா ஆகியோர் உடல்களும் இருந்தது. மேலும் கிணற்றில் மூழ்கிய ஜெயமுருகன் உடலும், தீயணைப்புத் துறையினர் தேடுதலுக்கு பிறகு கிடைத்தன.

இதையடுத்து நான்கு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்பு பணியை வேடிக்கை பார்க்க மக்கள் கூடியதால், திருவண்ணாமலை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT