க்ரைம்

சென்னையில் டெல்லி பெண்ணிடம் வழிப்பறி: கார் ஓட்டுநர் கைது

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: சுற்றுலாவுக்கு சென்னை வந்த டெல்லி பெண்ணை சவாரிக்காக அழைத்துச் சென்று, நடுவழியில் வழிப்பறி செய்து தப்பிய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

டெல்லியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், சுற்றுலாவுக்காக 15 நாட்களுக்கு முன்னர் சென்னை வந்து தங்கினார். கடந்த ஆக.17-ம் தேதி அதிகாலை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் இருந்து தனியார் வாடகை வாகன செயலி மூலம் காரை முன்பதிவு செய்து அரும்பாக்கம் நோக்கி சென்றார்.

அரும்பாக்கம் செல்ல வேண்டிய கார், மதுரவாயல் மேம்பாலம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்றதும் ஓட்டுநர் காரை நிறுத்தி உள்ளார்.

பின்னர் அந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி, அவரது பர்சில் இருந்த பணத்தை பறித்துள்ளார். இதற்கு அந்த பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, அந்த ஓட்டுநர் அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், வழிப்பறி செய்த பணத்துடன், பெண்ணை அங்கேயே இறக்கிவிட்டு தப்பியுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் தனது நண்பரை செல்போனில் தொடர்பு கொண்டு, அவரது உதவியுடன் தான் தங்கியிருந்த இடத்துக்கு சென்றுள்ளனர். பின்னர், இது தொடர்பாக வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

முதல் கட்டமாக வாடகை வாகன செயலி மற்றும் சம்பவ இடம் மற்றும் அதை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் டெல்லி பெண்ணிடம் பணத்தை பறித்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது பீர்க்கன்கரணையைச் சேர்ந்த கோபிநாத் (21) என்பது தெரிந்தது. உடனடியாக தலைமறைவாக இருந்த கோபிநாத்தை கைது செய்த போலீஸார், அவரது காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT