சென்னை: சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே செல்போன் திருடனை மேற்கு வங்க சிறுவன் ஒருவன் விரட்டிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர் ரயிலில் கடந்த 3-ம் தேதி இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தார். பின்னர் சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலை அவரது செல்போனை யாரோ திருடுவது தெரியவந்தது. சுதாரித்து எழுந்த சிறுவன் செல்போன் திருடிய நபரை துரத்திச் சென்று பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்து தாக்கினார்.
பின்னர், அந்த நபர் பெரியமேடு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீஸாரின் விசாரணையில் பிடிபட்டவர் 15 வயது இளஞ்சிறார் என்பது தெரிந்தது. மேலும் அவரிடமிருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட சிறுவன் சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் தூங்கிக் கொண்டிருந்த நபர்களின் செல்போன்களை அடுத்தடுத்து திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, சிறுவனை போலீஸார் கைது செய்து அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.