விழுப்புரம் / சென்னை: தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியவர் தற்கொலை செய்ய முயன்ற வழக்கில், கட்டாய வசூல் நடவடிக்கை தடுப்புச் சட்டத்தில் நிதி நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பென்னைவளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாஸ் (43). இவர் 2019-ல் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.9.84 லட்சம் கடன் பெற்று, பொக்லைன் இயந்திரம் வாங்கியுள்ளார்.
வட்டியுடன் சேர்த்து 2025-ம் ஆண்டு வரை ரூ.15 லட்சத்து 97,660 செலுத்த வேண்டும். இதில் ரூ.5 லட்சத்து 20,680 மட்டுமே அப்பாஸ் செலுத்தி உள்ளார். மேலும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக தவணைத் தொகை செலுத்தவில்லை. ரூ.10.80 லட்சம் பாக்கி இருந்துள்ளது.
இந்நிலையில், பென்னைவளம் கிராமத்தில் தனது செங்கல் சூளையில் இருந்த அப்பாஸிடம் கடன் தொகையை வசூலிப்பதற்காக, தனியார் நிதி நிறுவன மேலாளர்கள் மூர்த்தி, தீபஜோதி, ஊழியர் தியாகலீசன் உட்பட 4 பேர் கடந்த 13-ம் தேதி சென்றுள்ளனர்.
கடன் தொகையை வசூலிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. இதனால் மனமுடைந்த அப்பாஸ், தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், உயர் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அப்பாஸ் கொடுத்த புகாரின் பேரில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் தமிழ்நாடு பணக் கடன் வழங்கும் நிறுவனங்களின் கட்டாய வசூல் நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் திருவெண்ணெய் நல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நிதி நிறுவன மேலாளர் மூர்த்தியை கைது செய்தனர்.
கைது நடவடிக்கை... சட்டம்-ஒழுங்கு டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கடன் வழங்கும் நிறுவனங்கள் (கட்டாய வசூல் நடவடிக்கைகள் தடுப்பு) சட்டம் 2025 ஜூன் 9-ல் நடைமுறைக்கு வந்தது.
ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை, குறிப்பாக விவசாயிகள், பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினரை, தனியார் கடன் வழங்கும் நிறுவனங்களின் துன்புறுத்தல் அல்லது கட்டாய மீட்பு முறைகளிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த சட்டம் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சட்டத்தின் கீழ் முதல் வழக்கை கீழ் திருவெண்ணெய் நல்லூர் போலீஸார் பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு டிஜிபி தெரிவித்துள்ளார்.