சிக்கந்தர்
சென்னை: கொலை செய்யப்பட்ட கணவன், மகன் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பெருங்குடி குப்பைக் கிடங்கில் மூட்டைகட்டி வீசப்பட்ட இளம் பெண் சடலம் 3-வது நாள் தேடுதலில் கண்டு பிடிக்கப்பட்டது.
பிஹார் மாநிலம், ஷேக்பூரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுரவ் குமார் (24). இவர் கொலை செய்யப்பட்டு, சாக்கு மூட்டையில் கட்டி அடையார், இந்திரா நகர், 1-வது அவென்யூவில் கடந்த 26-ம் தேதி வீசப்பட்டார்.
இது தொடர்பாக அடையாறு போலீஸார் வழக்குப் பதிந்து அதே மாநிலத்தைச் சேர்ந்த காவலாளி சிக்கந்தர் என்ற சத்யேந்தர் (30), கூட்டாளிகளான அதே மாநிலத்தைச் சேர்ந்த லலித் யாதவ் (40), விகாஷ் குமார் (24) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கவுரவ் குமார் மட்டும் அல்லாமல் அவரது மனைவி முனிதா குமாரி (22), மகன் பிர்மானி குமார் (2) ஆகியோரையும் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசியது தெரிந்தது. குறிப்பாக மகன் மத்திய கைலாஷ் ரயில்வே பாலத்தின் கீழ் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய், மனைவி பெருங்குடி குப்பைக் கிடங்கில் வீசப்பட்டனர்.
பிஹார் இளைஞர், அவரது மகன் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்ட நிலையில், மனைவி உடலை பொக்லைன் இயந்திரம் மூலம் பெருங்குடி குப்பைக் கிடங்கில் போலீஸார் தொடர்ந்து தேடினர். நேற்று 3-வது நாளாக 100-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் குப்பையை கிளறி தேடினர். இதையடுத்து மதியம் 12 மணியளவில் முனிதா குமாரி உடல் மீட்கப்பட்டது.
முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட மூவரும் முனிதா குமாரியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும், ஒத்துழைக்காத அவரையும், தடுக்க முயன்ற அவரது கணவரையும், அழுது கொண்டிருந்த மகனையும் அடித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலையான கவுரவ் குமார் பிஹாரிலிருந்து சென்னைக்கு வேலை தேடி புறப்பட்டபோது, அவரது மனைவியும் கூடவே புறப்பட்டுள்ளார். `வேலை கிடைத்த பிறகு குடும்பத்தோடு செல்லுங்கள். அதுவரை செல்ல வேண்டாம்' என கவுரவ் குமார் குடும்பத்தினர் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் முனிதா குமாரி கேட்காமல், குழந்தையுடன் கிளம்பியுள்ளார்.
இந்நிலையில்தான் சக மாநிலத்தவர்களாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொலை தொடர்பாக போலீஸார் விசாரிக்கச் சென்றபோது சத்யேந்தர் தாடியுடன் இருந்த தன் முகத்தை மழித்து விட்டு, போலீஸார் முன்பாகவே எதுவும் தெரியாததுபோல் சைக்கிளில் சாதாரணமாக சென்றுள்ளார். சந்தேகத்தின்பேரில் அவரை பிடித்து விசாரித்தபோது அனைத்து தகவல்களும் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.