சசிகலா |கோப்புப் படம்
வாணியம்பாடி: அரூரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன பெண் வாணியம்பாடி அருகே கல் குவாரி குட்டையில் நேற்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் தெற்கு, பாரதிநகர் பகுதியில் செயல்படாத கல்குவாரியில் நேற்றுகாலை துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது கல்குவாரி குட்டையில் பெண் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வாணியம்பாடி கிராமிய காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கிராமிய போலீஸார், பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் அரூர் அடுத்த பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சசிகலா (52) என்பதும், இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 24 பவுன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்துடன் காணாமல் போனதாக, அவரது கணவர் அசோகன் என்பவர் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் சசிகலா காணாமல் போனது தொடர்பாக 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சொத்து பிரச்சினை காரணமாக அவரது கணவர் அசோகன் மற்றும் மருமகன் ஆகியோர் ஒன்று சேர்ந்து சசிகலாவை கொலை செய்து அவரது உடலை வாணியம்பாடி பகுதிக்கு கொண்டு வந்து செயல்படாத கல்குவாரியில் வீசீவிட்டு சென்றது தெரியவந்தது.
இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து சசிகவாவின் கணவர் அசோகன் மற்றும் மருமகன் அஸ்லாம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.