க்ரைம்

சென்னையில் தனியே வசித்த முதியவர் கொலை: நகைகளுடன் தப்பிய பிஹார் நண்பர் கைது

செய்திப்பிரிவு

துணிக்கடையில் ஒன்றாக வேலை பார்த்த முதியவரை கொலை செய்துவிட்டு, அவரது வீட்டில் இருந்து நகைகளுடன் பிஹாருக்கு தப்ப முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.

புரசைவாக்கம் அரசப்பா தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (61). அண்ணா நகரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி காலமாகிவிட்டதால், தனியாக வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டுக்கு அவரது அண்ணன் மகன் விக்னேஷ் வந்துள்ளார். வீட்டின் கதவு பூட்டி இருந்தது. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த விக்னேஷ். வீட்டுக்குள் பால கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

          

தகவலின் பேரில் வேப்பேரி போலீஸார் வந்து, உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டிருந்தன.

பாலகிருஷ்ணனின் வீட்டுக்கு வெறுங்கையுடன் வரும் நபர் ஒருவர், பையுடன் வெளியேறும் காட்சி அருகே இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்தது. அவர், பாலகிருஷ்ணன் பணிபுரியும் துணிக்கடையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்யும் பிஹாரைச் சேர்ந்த ஷியாம் மாதேவ் (35) என்பது உறுதியானது.

அண்ணா நகரில் தங்கியிருந்த ஷியாமை போலீஸார் கைது செய்தனர். ஒரே இடத்தில் வேலை செய்ததால் பால கிருஷ்ணனும், ஷியாமும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். சம்பவத்தன்றும் வழக்கம் போல பாலகிருஷ்ணனின் வீட்டில் இருவரும் மது அருந்தியுள்ளனர். பாலகிருஷ்ணன் போதையில் மயங்கிய பிறகு, அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு நகைகளை ஷியாம் திருடிச் சென்றது தெரியவந்தது.

பிஹாருக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்த அவரை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர், அவரிடம் இருந்து நகைகள் முழுமையாக மீட்கப்பட்டன.

SCROLL FOR NEXT