க்ரைம்

கன்னியாகுமரி அருகே ரிசார்ட்டில் ஆஸ்திரிய நாட்டு பயணி மர்ம மரணம்

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த தாமஸ் கொரோ ஸ்டேன்ஸ்கி (60) என்பவர், ஓராண்டு சுற்றுலா விசா மூலம் சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரிக்கு வந்தார். கன்னியாகுமரியை அடுத்த சொத்தவிளை கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட்டில் தங்கி இருந்தார்.

சமீபத்தில் இவர் நாகர்கோவிலுக்கு பேருந்தில் வந்தபோது, ராணுவ வீரர் ஒருவருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கைகலப்பில் தாமஸ் கொரோ ஸ்டேன்ஸ்கி பேருந்தில் இருந்து தவறி விழுந்தார். தலையில் ஏற்பட்ட ரத்தக் காயங்களுடன் அவர் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ரிசார்ட்டில் தங்கி இருந்த தாமஸ் கொரோ, 2 நாட்களாக அறையை விட்டு வெளியே வரவில்லை. இச்சூழலில் ரிசார்ட்டில் இருந்து நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு வந்து பார்த்தபோது தாமஸ் கொரோ ஸ்டேன்ஸ்கி தனது அறையின் வெளியே இறந்து கிடந்தார்.

உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அவர் இறந்து இரண்டு நாட்களுக்குமேல் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து, ஆஸ்திரியாவில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து, சுசீந்திரம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT