கரூர்: அரவக்குறிச்சி அருகே எஸ்பிஐ வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 முகமூடி கொள்ளையர்கள் அலாரம் ஒலி கேட்டு தப்பியோடியதால் வங்கியில் பணம், நகை எதுவும் கொள்ளை போகாமல் தப்பியது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கோவிலூரில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளை உள்ளது. இன்று (செப். 21ம் தேதி) அதிகாலை 1 மணியளவில் 4 பேர் கொண்டு முகமூடி அணிந்த மர்ம கும்பல் வங்கி கட்டிடத்தின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
வங்கியில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முயன்றப்போது வங்கியின் அலாரம் ஒலி எழுப்பியதால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். வங்கியில் இருந்த பணம், நகைகள், பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை என வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
அரவக்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்துக்கு கை ரேகை நிபுணர்களுடன் சென்று ஆய்வு செய்தனர். ரேகைகள் எதுவும் பதிவாகியுள்ளதா நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறியும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நள்ளிரவில் வங்கி ஜன்னலை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.