சென்னை: லஞ்ச ஒழிப்பு போலீஸ் எஸ்ஐ-யை தாக்கி செல்போன் பறிக்க முயன்ற, வழிப்பறி கொள்ளையர்களை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
சென்னை ஆலந்தூர், வடக்கு ராஜா தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ் (39). இவர் ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையில் எஸ்ஐ-யாக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில், ஆதம்பாக்கம் நியூ காலனி 1-வது தெருவில் உள்ள ஒரு மருந்தகத்துக்குச் சென்று மாத்திரைகளை வாங்கிக்கொண்டு, பரங்கிமலை சுரங்கப்பாதை சர்வீஸ் சாலை வழியாக நடந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் அவர் நடந்து சென்றபோது, மர்ம நபர்கள் 3 பேர் பின்தொடர்ந்து வந்தனர். திடீரென அவர்கள் துரைராஜை தாக்கி அவர் கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறிக்க முயன்றனர்.
அவர்களிடம் இருந்து தனது செல்போனை விடாமல் இறுகப் பற்றிக்கொண்ட துரைராஜ், வலியால் அலறி கூச்சலிட்டார். அவரது சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதைக் கண்ட மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது ஒருபுறம் இருக்க தாக்குதலில் காயம் அடைந்த துரைராஜ் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வழிப்பறி விவகாரம் தொடர்பாக பரங்கிமலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முதல் கட்டமாக தப்பி ஓடியவழிப்பறி கொள்ளையர்களை சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.