ராஜேஸ்வரி, பிரகாஷ், தமிழரசன்
பொன்னேரி: பொன்னேரி அரசு மருத்துவமனை வளாகத்தில் தற்காலிக பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றவர், எஸ்ஐயை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற போது, இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள உப்பரபாளையத்தைச் சேர்ந்தவர் வினோத். கிரேன் ஆபரேட்டரான இவரது மனைவி ராஜேஸ்வரி (34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், பொன்னேரி அரசு மருத்துவமனை, அவசர சிகிச்சைப் பிரிவின் கணினி பிரிவில் கடந்த 8 மாதங்களாக தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்த ராஜேஸ்வரி, வழக்கம்போல் நேற்று முன் தினம் காலை பணிக்கு சென்று, மாலை பணி முடிந்து, வீடு திரும்புவதற்காக மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த நபர், தான் கேனில் வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றினார்.
இதில், அதிர்ச்சியடைந்த அவர் மருத்துவமனை உள்ளே செல்ல முயன்றபோது பின் தொடர்ந்து சென்ற அந்த நபர், ராஜேஸ்வரி மீது தீ வைத்து தப்பியோடினார்.
இதில், தீக்காயமடைந்த ராஜேஸ்வரி, மருத்துவமனை ஊழியர்களால் மீட்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே பொன்னேரி ஜே.எம்.1 நீதிமன்ற நீதிபதி சரண்யா செல்வம், நேற்று முன் தினம் இரவு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்று, சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, மருத்துவர்கள், ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த பொன்னேரி போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் கூறியதாவது: பொன்னேரி அடுத்த மாதவரம் பகுதியில் வசித்து வந்த வாகன ஓட்டுநரான பிரகாஷ்(38)-க்கு ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சோழவரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 8 மாதங்களுக்கு முன்பு ராஜேஸ்வரி பணிபுரிந்த போது, அவருக்கு பிரகாஷ் அறிமுகமானார். அந்த அறிமுகம், நாளடைவில் தவறான நட்பாக மாறியுள்ளது.
இச்சூழலில், கடந்த சில வாரங்களாக ராஜேஸ்வரி, பிரகாஷின் போன் அழைப்பை புறக்கணித்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு ராஜேஸ்வரியை நேரில் சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரகாஷ். நட்பை துண்டித்த ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இவ்வாறு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயானத்தில் பதுங்கல்
இச்சூழலில், ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிய பிரகாஷ், மாதவரம் அடுத்த பெருஞ்சேரி கிராமத்தில் உள்ள மயான பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, நேற்று அதிகாலை 3 மணியளவில் பொன்னேரி காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில், உதவி காவல் ஆய்வாளர் தமிழரசன் உள்ளிட்டோர் பெருஞ்சேரி மயானத்துக்கு சென்று, அங்கு பதுங்கி இருந்த பிரகாஷை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர்.
அப்போது பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உதவி காவல் ஆய்வாளர் தமிழரசனை வெட்டி தப்பியோட முயன்றுள்ளார்.
தீவிர சிகிச்சை
இதையடுத்து, தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சிவகுமார் துப்பாக்கியால் பிரகாஷின் வலது காலில் சுட்டார். குண்டு பாய்ந்து விழுந்த பிரகாஷை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, காயமடைந்த உதவி காவல் ஆய்வாளர் தமிழரசன் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீஸார் மீட்டு, சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனை மற்றும் சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு திருவள்ளூர் ஆட்சியர் கவிதா நேரில் சென்று, சம்பவம் குறித்து ஊழியர்கள், மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: “பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
மேலும், பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உதவி காவல் ஆய்வாளர் தமிழரசனை, ஆவடி மாநகர காவல் இணை ஆணையர் சிவகுமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.