பிரதிநிதித்துவப் படம்
கரூர்: பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட காவலரை தாக்கிய வெளிமாநில தொழிலாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம் தென்னிலை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் கணேசன். இவர் நேற்றிரவு 10.30 மணி அளவில் தென்னிலை டாஸ்மாக் மதுக்கடை அருகே ரோந்து சென்றுள்ளார். அப்போது வெளிமாநில தொழிலாளர்கள் 3 பேர் பொது இடத்தில் மது அருந்தியுள்ளனர். இதனை காவலர் கணேசன் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் காவலர் கணேசன் சட்டையை கழட்டி, செல்போன் பிடுங்கிக்கொண்டு அவரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். இது குறித்து காவலர் கணேசன் அளித்த தகவலின் பேரில் தென்னிலை, க.பரமத்தி போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், காயமடைந்த காவலர் கணேசன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, காவலரை தாக்கிய புகாரில், தென்னிலை பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வரும் ஓடிசாவை சேர்ந்த குட கிர்ஷ் நாயக் (25), சகாதேவ் பாரிக் (26), ரபிந்தர கட்டா (22) ஆகிய 3 பேரை போலீஸார் இன்று (செப்.4-ம் தேதி) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளி மாநில தொழிலாளர்கள் காவலரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.