பரமசிவம்
மதுரை: மதுரையில் போலீஸ் விசா ரணைக்கு சென்று வந்த ஜோதிடர் உயிரிழந்தார். மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம்(55). இவரது மனைவி அய்யம்மாள். இவர்களுக்கு 2 மகன், மகள் உள்ளனர்.
பரமசிவம் அப்பகுதியில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டி ஜோதிடம், குறி சொல்லி வந்தார். இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மாலதி தம்பதிக்கும் பொது இடத்தைப் பயன்படுத்துவதில் பிரச்சினை இருந்தது.
கடந்த 19-ம் தேதி இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மாலதி கொடுத்த புகாரின்பேரில் பரமசிவம் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். கடந்த ஜூலை 23-ம் தேதி பரம சிவத்தை கைது செய்த போலீ ஸார் அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.
இந்நிலையில் உடல்நிலை பாதித்ததாகக் கூறி பரமசிவம், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். இதையடுத்து போலீஸார் தாக்கியதால் அவர் இறந்ததாக குடும்பத்தினர் புகார் தெரிவித்ததால் ஆர்டிஓ விசா ரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து பரமசிவத்தின் உறவினர்கள் கூறியதாவது: கடந்த ஜூலை 16-ம் தேதி ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் பரமசிவம், அய்யம் மாளை தாக்கினர். இது தொடர்பாக மாலதி, பாலகிருஷ்ணன் மீது சிந்தாமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், விசாரிக்கவில்லை.
அதேநேரம் மாலதி அளித்த புகாரில் 19-ம் தேதி விசாரணை என்ற பெயரில் பரமசிவத்தை காவல் நிலையம் அழைத்துச் சென்று தாக்கினர். இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையிலும், பின்னர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரமசிவம் உயிரிழந்தார். அவரைத் தாக்கிய போலீஸார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
போலீஸார் கூறுகையில், ‘பாலகிருஷ்ணன்- மாலதி தம்பதிக் கும் பரமசிவத்துக்கும் வீ்ட்டின் அருகே பூங்கா இடத்தைப் பயன்படுத்துவதில் பிரச்சினை இருந்தது. 19-ம் தேதி நடந்த தகராறு தொடர்பாக இரு தரப்பு புகாரின் மீதும் விசாரணை நடத்தி வழக்குப் பதியப்பட்டது.
முன்னதாக, பரமசிவம் தவறி விழுந்ததாகவே மருத்துவ மனையில் கூறியுள்ளார். கோட்டாட்சியர் விசாரணை, பிரேதப்பரிசோதனையில் உண்மை தெரிய வரும்’ என்றனர்.