கொலை நடந்த பகுதிக்கு தர்ம முனீஸ்வரனை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
கோவில்பட்டி / மதுரை: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் உடலை 11 நாட்களுக்கு பின்னர் உறவினர்கள் நேற்று பெற்றுதகனம் செய்தனர்.
இதில் துரிதமாக வழக்கை நடத்தி கொலையாளிக்கு தண்டனை பெற்றுத்தரப்படும் என தென்மண்டல ஐஜி உறுதி தெரிவித்துள்ளார்.
வேடநத்தத்தைச் சேர்ந்த தொழிலாளி சுப்புராஜ் என்பவரின், 17 வயது மகள் கடந்த 10-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டார்.
அவரது கொலையாளியை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இவ்விவகாரத்தில் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த முனியசாமி மகன் மாவீரன் என்ற தர்ம முனீசுவரனை (37) நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று மாணவியின் உடலை நேற்று பெற்றுக்கொண்டனர். அங்கு, மாணவியின் உடலுக்கு அமைச்சர் பி.கீதாஜீவன், எம்எல்ஏக்கள் ஜீ.வி.மார்க்கண்டேயன், கடம்பூர் செ.ராஜூ, பாஜக மாவட்டத் தலைவர் சரவண கிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், மயானத்துக்கு எடுத்து வந்து மாணவியின் உடல் தகனம் செய்தனர்.
கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனை நேற்று சம்பவ இடத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். கொலை செய்தது எப்படி என விசாரித்தனர். பின்னர், தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை 14 நாட்கள் காவலில் வைக்கவும், ஏப்.2-ம் தேதி ஆஜர்படுத்தவும் நீதிபதி பிரீத்தா உத்தரவிட்டார். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய அவர் அடைக்கப்பட்டார். கைதான தர்ம முனீஸ்வரன் ஏற்கெனவே மூதாட்டி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர்.
உயர் நீதிமன்றத்தில் கடந்த டிச.18-ம் தேதி ஜாமீன் பெற்றுள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
இதற்காக அவர் தினமும் சாயல்குடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேடநத்தம், குறுக்குச்சாலை வழியாக தூத்துக்குடிக்கு வந்து சென்றுள்ளார்.
செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் மோட்டார் சைக்கிளில் வரும்போது அப்பகுதியை நோட்டமிட்டுள்ளார். அப்போது, இரவு நேரங்களில் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் இயற்கை உபாதை கழிக்க காட்டுப்பகுதிக்குச் செல்வதை கவனித்துள்ளார்.
10-ம் தேதி இரவு அப்படி அவர் காட்டுப்பகுதியில் நோட்டமிட்டபோது, மாணவி அவரிடம் சிக்கியுள்ளார். அவரிடம் நகைகள் எதுவுமில்லாததை அறிந்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துவிட்டு தப்பிவிட்டதாக போலீஸார் கூறினர்.
துரித நடவடிக்கை
இதனிடையே தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி கூறும்போது, இவ்வழக்கில் தொடக்கத்தில் எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில், மிக நுணுக்கமாக அறிவியல் பூர்வமாக விசாரித்து கொலையாளியை கண்டறிந்தோம்.
மற்றொரு கொலை வழக்கில் ஜாமீனில் வந்த சூழலில்தான் மாணவியை கொலை செய்திருக்கிறார். இவ்வழக்கில், விசாரணையை துரிதப்படுத்தி நீதிமன்றம் மூலம் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்றார்.