அரியலூர்: அரியலூர் நகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்கள் உள்பட 12 பேர் மீது அரியலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் ஜூலை 3-ம் தேதி காவல் ஆய்வாளர் கவிதா தலைமையில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.14 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றினர்.
மேலும் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த குடிநீர் ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவரிடம் இருந்து யுபிஐ மூலம் ரூ.5.47 லட்சம் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து, அரியலூர் துணை ஆய்வுக் குழு அலுவலர் சின்னையன் அளித்த புகாரின் பேரில், அரியலூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் அலுவலக ஊழியர்கள் 11 பேர் என மொத்தம் 12 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.