க்ரைம்

ஒசூர் மாசுகட்டுபாட்டு வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை: ரூ.3 லட்சம் பறிமுதல்

கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஒசூர் மாசுகட்டுபாட்டு வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளருக்கு கொடுக்க இடைத்தரகர் பெற்ற ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் சிவம்பட்டி கிராமத்தில் குவாரி நடத்தி வருபவர் மேட்டுரைச் சேர்ந்த பிரதாப் (41). அவர் குவாரி நடத்த தடையில்லா சான்றிதழ் (சிடிஇ சான்றிதழ்) வாங்க ஆக.22-ம் தேதி ஒசூர் தர்காவில் இயங்கி வரும் மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் புருஷோத்தமனை அணுகியுள்ளார். அந்த சான்றிதழ் பெற ரூ.15 லட்சம் லஞ்சமாக பொறியாளர் புருஷோத்தமன் கேட்டுள்ளார்.

அவ்வளவு பணம் கொடுக்க முடியாது குறைத்துக் கொள்ளுமாறு பிரதாப் கேட்டுள்ளார். ஆகஸ்ட் 27-ம் தேதி ரூ.10 லட்சமாக குறைத்து முடிவு செய்யப்பட்டது. அதில் முதல் தவணையை சேலத்தில் உள்ள இடைத்தரகர் சிவக்குமாரிடம் ரூ.3 லட்சத்தை கொடுக்குமாறு பொறியாளர் புருஷோத்தமன் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத பிரதாப் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸôருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ரசாயணம் தடவிய ரூ.3 லட்சம் பணத்தை பிரதாப்பிடம் கொடுத்து சிவக்குமாரிடம் கொடுக்க அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் சிவக்குமார் ஒசூர் வந்துவிட்டதால் அவரது உதவியாளர் முருகனிடம் இந்தப் பணத்தை கொடுக்குமாறு புருஷோத்தமன் கூறியதால் சேலம் ஐந்து வழிச்சாலை சந்திப்பில் நேற்று இரவு பிரதாப் ரூ.3 லட்சத்தை உதவியாளர் முருகனிடம் கொடுத்துள்ளார்.

அப்பொழுது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் முருகனை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். இதனிடையே லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜெயக்குமார், ஆய்வாளர் விஜயகுமார், காவலர்கள் மஞ்சு நாத், ரவி, மணி ஆகியோர் ஒசூர் மாசுகட்டுப்பாட்டு அலுவலகம் முழுவதும் சோதனை நடைபெற்றது.

இடைத்தரகர் முருகனிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சேலத்தில் இருந்து இடைத்தரகர் முருகன், சிவக்குமார், புருஷோத்தமன் ஆகிய 3 பேரையும் ஒசூர் அழைத்து வந்து டிஎஸ்பி ஜெயக்குமார் விடிய விடிய விசாரணை நடத்தினார்.

SCROLL FOR NEXT