கோப்புப் படம்

 
க்ரைம்

நேப்பியர் பாலத்தில் இருந்து கூவத்தில் குதித்த அண்ணா பல்கலை. மாணவி உடல் கரை ஒதுங்கியது

செய்திப்பிரிவு

நேப்பியர் பாலத்தில் இருந்து கூவத்தில் குதித்த, அண்ணா பல்கலைக்கழக மாணவியின் உடல் நேற்று காலை கரை ஒதுங்கியது.

சென்னை நேப்பியர் பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் நேற்று முன்தினம் காலை இளம்பெண் ஒருவர் குதித்தார். இதைப் பார்த்து, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக அண்ணா சதுக்கம் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கூவத்தில் குதித்த பெண்ணை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, அண்ணா சதுக்கம் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது. பாலம் அருகில் ஒரு பை கிடந்தது. அதில், கூவத்தில் குதித்த இளம்பெண்ணின் கல்லூரி அடையாள அட்டை இருந்தது. அதன்படி, அவர் அண்ணா பல்கலை.யில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி என்பது தெரியவந்தது.

மேலும், அவரது பெயர் யுவஸ்ரீ (25) என்பதும், அவர் சென்னையை அடுத்த பெருங்களத்தூர் ராகவேந்திரா 2-வது தெருவில் வசித்து வருவதும் தெரியவந்தது. அவரது பையில் இருந்த நோட்டில், 'வாழப் '"பெற்றோரும். பிடிக்கவில்லை. எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. பெற்றோரும், சகோதரியும் என்னை மன்னித்து விடுங்கள்' என உருக்கமாக குறிப்பிட்டு இருந்தார்.

தீயணைப்பு துறையினர் கூவத்தில் குதித்து மாயமான யுவஸ்ரீயை படகு மூலம் நேற்று முன்தினம் இரவு வரை தேடினார்கள். அதன் பிறகு போதிய வெளிச்சம் இல்லாததால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை மீண்டும் தேடுதல் பணி நடைபெற்றது. அப்போது, கடற்கரை முகத்துவாரம் அருகே மாணவியின் உடல்கரை ஒதுங்கியது. உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT