க்ரைம்

திருவள்ளூர் அருகே முகத்தில் ஆசிட் ஊற்றி ஆந்திராவை சேர்ந்த பெண் கொடூர கொலை

இரா.நாகராஜன்

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே தொட்டாரெட்டிக்குப்பம் பகுதியில் மர்ம நபர்களால் முகத்தில் ஆசிட் ஊற்றி ஆந்திர பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தொட்டாரெட்டிக்குப்பம் கிராமம் அமைந்துள்ளது. அங்குள்ள வயல்வெளி ஒன்றில் இன்று காலை ஆசிட் ஊற்றி முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் ஊத்துக்கோட்டை போலீஸார், சம்பவ இடம் விரைந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் அருகே கிடந்த மொபைல் போனை கைப்பற்றி முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அதன்படி, “கொலை செய்யப்பட்ட பெண் ஆந்திர மாநிலம் நாகலாபுரம் அருகே உள்ள நின்ரை, சவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருணா (40) என்பதும், அவர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே உள்ள வதட்டூர் கண்டிகை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்த நிலையில், இன்று காலை மர்ம நபர்களால் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டும், கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.

உறவினர்களுக்கிடையேயான சொத்து தகராறு காரணமாக அருணா கொலை செய்யப்பட்டாரா ? மர்ம நபர்களால் அருணா கடத்தி வரப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக ஆசிட் ஊற்றி முகம் சிதைக்கப்பட்டாரா ? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT