சென்னை: சென்னை போரூர் மாதனாங்குப்பம், அன்னை வேளாங்கண்ணி நகரில் உள்ள ஒரு வீட்டில் உயர் ரக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக சென்னை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸார் சம்பந்தப்பட்ட வீட்டில் நுழைந்து சோதனை நடத்தி, அங்கு பதுக்கி வைத்திருந்த 700 கிராம் ஒஜி வகையான உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக, பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த சுனில் (21), அவரது நண்பர்களான கோவூரைச் சேர்ந்த வருண் (23), அய்யப்பன் தாங்கலைச் சேர்ந்த விஸ்வேஸ் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
சுனிலின் தந்தை கபிலன் அதிமுகவில் திருவள்ளூர் மாவட்ட ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளராக பதவி வகித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இவர்களது பின்னணி மற்றும் கூட்டாளிகள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.