தூத்துக்குடியில் விபத்தில் சிக்கிய கார்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம்டைந்தனர்.
கோவை பிஎன் புதூர் சாஸ்திரி 1-வது தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சாரூபன் (23), புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை பரிசுத்தம்மன் மகன் ராகுல் ஜெபஸ்டியான் (23), திருப்பத்தூர் மந்தவெளி குறும்பேறியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் முகிலன் (23), தூத்துக்குடி தெர்மல் நகர் ரவிக்குமார் மகன் கிருத்திக்குமார் (23) மற்றும் சரண் (23) ஆகிய 5 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் இன்று (நவ.19) அதிகாலை 3 மணியளவில் 5 பயிற்சி மருத்துவர்களும் காரில் புதிய துறைமுகம் கடற்கரைக்கு சென்றனர். காரை சாரூபன் ஒட்டி சென்றார். கார் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பலத்த மழை பெய்தால் சாலை சரியாக தெரியாததால் கார் கட்டுபாட்டை இழந்து சாலையோரத்தில் நிற்கும் வேப்ப மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. இதனால் 5 பேரும் காருக்குள் சிக்கி கொண்டனர்
இது குறித்து அந்தப் பகுதியில் சென்ற மீனவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று காருக்குள் சிக்கிய 5 பேரையும் மீட்டனர். இதில் சாரூபன், ராகுல் ஜெபஸ்டியான் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
முகிலன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த கிருதிக்குமார், சரண் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சம்பவ இடத்தில் ஏஎஸ்பி மதன், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் மற்றும் போலீஸார் சென்று விசாரணை நடத்தினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து அரசு மருத்துவமனையில் ஏராளமான பயிற்சி மருத்துவர்களும் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் குவிந்துள்ளனர். தூத்துக்குடியில் கார் விபத்தில் 3 பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து தென்பாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.