தேனி: ஆண்டிபட்டி அருகே பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நாராயணசடனம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (28). இவர், நேற்று தேனியில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள க.விலக்கு நான்கு சாலை சந்திப்பு அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்த 4 பேர் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது.இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த கண்டமனூர் வேலாயுதபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ்(75), செல்வம் (50), ஏரதி மக்காள்பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் (60), மதுரை அரசரடியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (39) ஆகியோரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பால்ராஜ், செல்வம், மாரியம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர். பாக்கியலட்சுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து க.விலக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டி வந்த அஜித்குமாரைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.