சென்னை: ஏ.சி. சாதனத்தை திருடியதாக 2 இளைஞர்களை மடிப்பாக்கம் போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை, மடிப்பாக்கம், குபேரன் நகர் 14-வது தெருவில்உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் பிரவீன் (31). இவரும் மனைவியும் கடந்த 10-ம்தேதி வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்குச் சென்றுவிட்டனர். இரவுவீடு திரும்பியபோது வீட்டின்வெளிப்புற சுவரில் மாட்டியிருந்த குளிரூட்டியின் (ஏ.சி.) வெளிப்பாகம் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஏசியின் வெளிப்பாகத்தை 2 இளைஞர்கள் திருடிச் செல்வதுதெரிந்தது.
அதன் அடிப்படையில், திருட்டில் ஈடுபட்டதாக துரைப்பாக்கம் எல்லையம்மன் நகர் சலீம் (25), அதே பகுதி மோகன கிருஷ்ணன் (23) ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.
முன்னதாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோடை வெயிலிலிருந்து தப்பி இதமான குளிரில் படுத்துத் தூங்க வேண்டும் என்ற ஆசை யால், ஏசியை திருடியதாக இருவரும் கூறியுள்ளனர். விசாரணைக்குப் பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.