க்ரைம்

சிவகங்கை | சட்டவிரோத மது விற்பனையை தடுக்கத் தவறிய சாலைக்கிராமம் சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட்

இ.ஜெகநாதன்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறிய சிறப்பு எஸ்ஐ தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

சாலைக்கிராமம் அருகே மதுக்கூடங்கள் கூடிய 2 அரசு மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் மதுக்கடை திறக்காத நேரங்களில் மதுக்கூடங்களிலும், அதனையொட்டி திறந்தவெளியிலும் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து கடந்த வாரம் சட்டவிரோதமாக மது விற்ற 2 மதுக்கூடங்களுக்கு டாஸ்மாக் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் திறந்தவெளியில் சட்ட விரோதமாக மதுவிற்ற ஒருவரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறியதற்காக, சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு எஸ்ஐ ஜான்பிரிட்டோவை சிவகங்கை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்பி செல்வராஜ் உத்தரவிட்டார்.

இதை கேள்விப்பட்டு காவல்நிலையம் ஓய்வு அறையிலேயே ஜான் பிரிட்டோ தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை சக காவலர்கள் காப்பாற்றி, மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி துரை உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT