ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிக்கு அபராதம் விதித்த சிறப்பு சார்பு ஆய்வாளரை கொலை செய்ய முயன்றவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளராக இருப்பவர் தர்மராஜ். இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் போலீஸாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவ்வழியே ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி வந்த வெங்கடேஷ் (26), என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில், ஓட்டுநர் உரிமம் இல்லாதது தெரியவந்தது. அதனால் அவருக்கு ரூ.600 அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, அன்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மராஜுவை, தகாத வார்த்தைகளால் திட்டிய வெங்கடேஷ் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றார். இது குறித்து தர்மராஜா அளித்த புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வெங்கடேஷுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.7,500 அபராதம் விதித்து நீதிபதி எம்.ப்ரீத்தா தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் பட்டுராஜன் ஆஜரானார்.