புதுக்கோட்டை: டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வை 666 பேர் எழுதினர். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள குளத்தூரைச் சேர்ந்த தர்மர்(20) என்பவர் பட்டன் கேமரா மற்றும் புளூடூத் பயன்படுத்தி தேர்வு எழுதியது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை தேர்வு எழுத தடை விதித்ததுடன், இதுகுறித்து புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தர்மரை போலீஸார் பிடித்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவருக்கு, ஈரோட்டிலிருந்து பரணிதரன்(20) என்பவர் உதவி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, தர்மரை போலீஸார் கைது செய்தனர். பரணிதரன் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீஸார் தெரிவித்தனர்.