சென்னை: சென்னை காவல் துறையில் புனித தோமையர்மலை மோட்டார் வாகனப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக (சிறப்பு எஸ்ஐ) பணிபுரிந்தவர் ஆண்ரூஸ் கால்டுவெல். இவர் 2021-ம் ஆண்டில் பெண் ஒருவரிடம், தான் உயர் போலீஸ் அதிகாரியாக உள்ளதாகவும், அந்த பெண்ணின் குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அந்த பெண்ணிடம் பழகியுள்ளார்.
மேலும், தனியாக வீடு எடுத்து கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர், ஆண்ரூஸ் கால்டுவெல் திருமணத்துக்கு மறுத்ததோடு, அப்பெண்ணை நிராகரித்துள்ளார்.
இதனால், வேதனை அடைந்த அப்பெண், சிறப்பு எஸ்ஐ மீது 27.01.2022 அன்று பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் விசாரித்தனர்.
இதில், ஆண்ரூஸ் கால்டுவெல் மீதானகுற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தது.இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ரூஸ் கால்டுவெல் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றதால், அச்சமயம்கைதாகவில்லை. ஆனால், அவர் காவல்துறையில் பணிபுரிந்து கொண்டு பெண்ணிடம் மோசடி செய்தது ஒழுங்கீனமாகக் கருதப்பட்டது.
இதையடுத்து, துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 02.06.2022 அன்று சிறப்பு எஸ்ஐ ஆண்ரூஸ் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து நடைபெற்றதுறை ரீதியான விசாரணைகளுக்கு ஆஜராகாமலிருந்தார். மேலும், அவரது முன் ஜாமீன் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மோட்டார் வாகனப்பிரிவு துணை ஆணையர் பரிந்துரையை ஏற்று சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ரூஸ்கால்டுவெல்லை காவல் துறை பணியில் இருந்து நிரந்தர பணிநீக்கம் செய்து (Removal From Service) உத்தரவிட்டார்.