சந்திரசேகர், ஜெயராமன், சிவராமன் 
க்ரைம்

திருப்பூர் | ரூ.2000 நோட்டுகளை மாற்றி தர கமிஷன் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி: அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

திருப்பூர்: இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற 10 சதவீதம் கமிஷன் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக, திருப்பூர் அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்தவர் ஜெயராமன் (32). இவர், கொங்கு நாடு ஜனநாயக கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளராக உள்ளார். இவர், தன்னிடம்ரூ.2000 நோட்டுகள் உள்ளதாகவும், அதற்கு பதிலாக ரூ.500 நோட்டுகளாக வேண்டும் என்றும், மாற்றி தந்தால் 10 சதவீதம் கமிஷன் தருவதாகவும் கூறி, பொங்குபாளையம் காளம்பாளையத்தை சேர்ந்த பைனான்சியர் சபரிநாதன் (30)என்பவரை தொடர்பு கொண்டுள்ளார்.

இதையடுத்து, ரூ.30 லட்சத்தை (ரூ.500 நோட்டுகளாக)எடுத்துக்கொண்டு அதிமுக பிரமுகர் சந்திரசேகர் வீட்டுக்கு முன்பாக வருமாறு சபரிநாதனிடம் ஜெயராமன் கூறியுள்ளார். அதன்படி, நேற்று மதியம் அங்கு வந்த ஜெயராமன் (32), கொங்கு நாடு ஜனநாயக கழகத்தின் மாநில பொருளாளரான திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த சிவராமன் (36) ஆகியோர் சபரிநாதனிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, அதிமுக பிரமுகர் சந்திரசேகரின்வீட்டுக்குள் சென்றுள்ளனர். ஆனால், அதன்பிறகு அவர்கள் வெளியே வரவில்லை.

இந்நிலையில், தன்னிடம் 3 பேரும் சேர்ந்து ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக, பெருமாநல்லூர் போலீஸாரிடம் சபரிநாதன் புகார் அளித்தார். இதையடுத்து, 3 பேரையும் பிடித்து காவல் ஆய்வாளர் ஹேமலதா விசாரித்தார். அவர்களிடமிருந்து ரூ.17 லட்சத்து 75 ஆயிரத்தை கைப்பற்றி, காரை பறிமுதல் செய்தனர். இதில் சந்திரசேகர் (46), அதிமுக ஒன்றிய பாசறை செயலாளராகவும், அவரது மனைவி சங்கீதா ஒன்றிய கவுன்சிலராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT