கைதான உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத். 
க்ரைம்

தி.மலை | வெம்பாக்கம் அருகே மின் கம்பியை அகற்ற ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: வெம்பாக்கம் அருகே வீட்டு மனை மீது செல்லும் மின்சார கம்பியை அகற்ற ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத்தை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த ஆலந்தாங்கல் கிராமத்தில் வசிப்பவர் சக்திவேல். அதே கிராமத்தில் வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டுமனை வழியாக மின்சார கம்பி பாதை செல்வதால், வீடு கட்டும் பணி கடந்த ஜனவரி மாதம் தடைபட்டுள்ளது. இதையடுத்து, மின்சார கம்பி பாதையை அகற்றி கொடுக்க, வெம்பாக்கம் உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மின்சார கம்பியை அகற்றுவதற்கான திட்ட மதிப்பீடு தொகை ரூ.50 ஆயிரத்தை செலுத்த வேண்டும் என உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, அவரிடம் ரூ.50 ஆயிரத்தை, சக்திவேல் கடந்த மார்ச் மாதம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்டவர், மின்சார கம்பியை அகற்றிட நடவடிக்கை எடுக்காமல் சக்திவேலை அலைகழிக்க செய்துள்ளார்.

பின்னர், திட்ட மதிப்பீடு தொகையான ரூ.39 ஆயிரத்துக்கு, கண்காணிப்பு பொறியாளர் பெயரில் வங்கி வரைவோலை பெற்று வருமாறு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ரூ.50 ஆயிரம் கொடுத்து உள்ளதை நினைவுப்படுத்தியதும், வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.39 ஆயிரத்தை கொண்டு வந்து சக்திவேலுவிடம் உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத் கடந்த 17-ம் தேதி கொடுத்துள்ளார். மறுநாள்(18-ம் தேதி), ரூ.39 ஆயிரத்துக்கு வங்கி வரைவோலை எடுத்து வந்து மின்வாரிய அலுவலகத்தில் சக்திவேல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அவரது வீட்டு மனை முன்பு கடந்த 24-ம் தேதி, 2 மின் கம்பங்கள் இறக்கி வைத்துவிட்டு, மேலும் ரூ.2 ஆயிரம் கொடுக்குமாறு உதவி மின் பொறியாளர் வலியுறுத்தியுள்ளார். அப்போது, ஏற்கெனவே கொடுக்கப்பட்ட ரூ.50 ஆயிரத்தில், ரூ.39 ஆயிரத்துக்கு வங்கி வரைவோலை எடுக்கப்பட்ட பிறகு, மீதம் ரூ.11 ஆயிரம் உள்ளது என சக்திவேல் தெரிவித்துள்ளார். இதற்கு ரூ.11 ஆயிரத்தை நானும், மற்றொரு அதிகாரியும் எடுத்து கொண்டோம், தற்போது ரூ.2 ஆயிரம் கொடுத்தால்தான், அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் சக்திவேல் புகார் கொடுத்துள்ளார். அவர்களது அறிவுரையின்பேரில், தன்னுடைய அலுவலகத்தில் பணியில் இருந்த உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத்திடம் ரூ.2 ஆயிரத்தை சக்திவேல் நேற்று கொடுத்துள்ளார். அவரும் பெற்றுக் கொண்டார். அப்போது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான காவல் துறையினர், உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

SCROLL FOR NEXT