ஆரணி: ஆரணி பகுதியில் உள்ள மலைகளில் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான 5 தனிப்படையினர் ‘ட்ரோன்’ கேமரா உதவியுடன் சாராய தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய தடுப்பு பணியில் காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, ஆரணி பகுதியில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சாராய சோதனையில் இதுவரை சுமார் 30-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆரணி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 5 காவல் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படையினர் பூசிமலைக் குப்பம் காப்புக்காடு, அத்திமலைபட்டு காரமலை மற்றும் கண்ணமங்கலம் நாமகார மலை, சந்தவாசல் படவேடு உள்ளிட்ட பகுதிகளில் தனித்தனி குழுக்களாக சென்று நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மேலும், மலைப்பகுதிகளில் உள்ள புதர்கள், நிலச்சரிவுகளில் சாராயம் காய்ச்சப்படுகிறதா? என ‘ட்ரோன்’ கேமராக்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.