க்ரைம்

டாஸ்மாக் கடையில் லாரியில் இருந்து இறக்கியபோது மதுபாட்டில்களை திருடி சென்ற இளைஞர்கள்

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபானக் கிடங்கிலிருந்து, லாரிகள் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்கள் கொண்டு வருவது வழக்கம்.

அந்தவகையில், மயிலாடுதுறை மகாதானத் தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று முன்தினம் மாலை லாரியில் மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டன. அதை ஊழியர்கள் லாரியிலிருந்து இறக்கி வைத்து, கடைக்குள் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, கடை வாயிலின் அருகே சாலையோரத்தில் நின்று கண்காணித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் 2 பேர், கண் இமைக்கும் நேரத்தில் 48 மதுபாட்டில்கள் அடங்கிய அட்டைப்பெட்டி ஒன்றை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றுவிட்டனர். ஊழியர் ஒருவர் ஓடிச் சென்று அவர்களை பிடிக்க முயன்றும் முடியவில்லை. திருடிச் சென்ற மதுபாட்டிகளின் மொத்த மதிப்பு ரூ.6,140 என கூறப்படுகிறது.

இதுகுறித்து டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் சுரேந்திரன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து 2 இளைஞர்களையும் தேடி வருகின்றனர்.

மேலும், இளைஞர்கள் மதுபாட்டில்களை திருடிச் செல்வது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

SCROLL FOR NEXT