சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் பிடிபட்ட தொழில் அதிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து, விமானத்துக்குள் அனுப்பிக் கொண்டு இருந்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார் (50) என்பவர் திருச்சி செல்ல வந்திருந்தார். மத்திய தொழிற் பாதுகாப்பு படை அதிகாரிகள், அவருடைய உடைமைகளை ஸ்கேன் மூலம் பரிசோதித்தனர். சந்தேகம் ஏற்பட்டதால் அவர் கொண்டுவந்த பையை திறந்து சோதித்தனர்.
அதில் 7 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பயணியின் பயணத்தை ரத்து செய்து, அவரை சென்னைவிமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணையில், தொழிலதிபரான அவர்,அவரது பாதுகாப்புக்காக முறைப்படி லைசென்ஸ் பெற்று கைதுப்பாக்கி வைத்திருப்பதும் அந்த துப்பாக்கியில் பயன்படுத்துவதற்கான துப்பாக்கி குண்டுகள்தான் இவை என்பதும் தெரியவந்தது.
மேலும், அவற்றை விமானத்தில் அனுமதி இன்றி எடுத்துச் செல்லக்கூடாது என்பது தெரிந்தும்தவறுதலாக கார் ஓட்டுநர் தோட்டாக்கள் அடங்கிய பையை மாற்றி வைத்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார். பிறகு அவரிடம்விளக்கக் கடிதம் பெற்று, எச்சரித்து அனுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.