க்ரைம்

திருவாரூர் | தனியார் பேருந்து நடத்துனருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது

சி.எஸ். ஆறுமுகம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் ஆலந்தூர் அருகே இருசக்கர வாகனத்திற்கு வழிவிடாததால் தனியார் பேருந்தை வழிமறித்து ரகளை செய்ததுடன், பேருந்தின் கண்ணாடியை உடைத்து நடத்துனருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், திருவிடைச்சேரியிலிருந்து கும்பகோணத்தை நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஓட்டுநராக ரவியும், நடத்துனராக அருண்குமார் பணியில் இருந்தனர். அந்த பேருந்து கூகூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், இருசக்கர வாகனம் செல்ல வழி விடாததால், ஆத்திரமடைந்த அவர்கள் பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர், அப்பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து, நடத்துனரை தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனிடையே, தாக்குதலில் பலத்த காயமடைந்த நடத்துனர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் தாக்குதல் குறித்து பேருந்து நடத்துனரான அருண்குமார் (23), நாச்சியார் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் நாச்சியார் கோயில் காவல் ஆய்வாளர் கே. ரேகா ராணி தலைமையிலான போலீஸார், கூகூரை சேர்ந்தவர்களான தமிழழகன் (27), ரவிச்சந்திரன் (28), பாண்டியன் (29), மகேஷ் பாபு (38), பவித்ரன் (27) ஆகிய 5 பேரை கைது செய்து, நேற்று இரவு கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கில் அவர்கள் அனைவரும் புதுக்கோட்டை சிறையில் வரும் 31-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT