சென்னை: போதைப் பொருள் கடத்தல், விற்பனை மற்றும் பதுக்கலைத் தடுக்க சென்னையில் `போதை தடுப்புக்கான நடவடிக்கை' என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, அனைத்து காவல்நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் காலை சூளைமேடு, எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக விற்பனை செய்ததாக மதுரவாயல் ஆனந்தன் (23), சைதாப்பேட்டை திவாகர் (24), அதே பகுதி பிரவீன்குமார் (23), சுந்தரராஜன் (23), ஆகிய 4 பேர் கைது செய்யப் பட்டனர்.
அவர்களிடமிருந்து 330 உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்குக் கடத்தி வரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், பெண் கஞ்சா வியாபாரிகள் ஓட்டேரி அன்பழகி (25),கொருக்குப்பேட்டை பத்மா (55)ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 6 பேரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.