திருப்பூர்: பல்லடத்தில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் கொடுத்த குளிர்பானத்தை குடித்த சிறுவர்கள் மயங்கி விழுந்த நிலையில், சிறுவர்களை கடத்த அப்பெண் முயற்சித்தாரா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கரூர் வேலப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி சப்ரீன். இவர்களுக்கு சுயநிதி (8), பர்வேஸ்(5) என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பல்லடத்தில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக நேற்றுகரூரில் இருந்து பல்லடத்துக்கு அரசுப் பேருந்தில் 4 பேரும் வந்துகொண்டிருந்தனர்.
அப்போது பேருந்தில் பயணித்த பெண் ஒருவர், சப்ரீனிடம் குளிர்பானத்தை கொடுத்து, அதை குழந்தைகளுக்கு கொடுக்குமாறு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, குளிர்பானத்தை வாங்கி, தனது குழந்தைகள் இருவருக்கும் சப்ரீன் கொடுத்தார். குளிர்பானத்தை இருவரும் குடித்த நிலையில் பல்லடம் பேருந்து நிலையம் வந்தபோது, சிறுவர்கள் 2 பேரும் மயங்கி விழுந்தனர். குளிர்பானத்தை குடித்ததால் இருவரும் மயங்கி இருக்கலாம், குழந்தைகளை கடத்த அப்பெண் திட்டம் வகுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல்லடம் போலீஸாருக்கு தகவல்அளிக்கப்பட்டது. சிறுவர்கள் இருவரும், பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் மேல்சிகிச்சைக்காக திருப்பூர்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பல்லடம் போலீஸார் கூறும்போது, “சிறுவர்கள் குடித்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்திருந்ததா? அல்லது நஞ்சான குளிர்பானமா? என்பது தெரியவில்லை. சிறுவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். தொடர்ந்து விசாரித்துவருகிறோம். குளிர்பானம் கொடுத்த மர்ம பெண், கோவைக்கு செல்வதாக சப்ரீனிடம் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரித்துவருகிறோம்” என்றனர்.