சென்னை: போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வங்கதேச இளைஞர் கரோனா பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பி ஓடினார். தனிப்படை போலீஸார் அவரை செங்கல்பட்டில் கைது செய்தனர்.
சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் விமான நிலையத்தில் அண்மையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.
வங்கதேச இளைஞர்: இதையடுத்து, அவரது பாஸ்போர்ட்டை வாங்கி ஆய்வு செய்துபார்த்தபோது, அது போலியாகதயாரிக்கப்பட்ட இந்திய பாஸ்போர்ட் என்பது தெரியவந்தது. அதை உடனடியாக பறிமுதல் செய்த போலீஸார் போலி பாஸ்போர்ட் வைத்திருந்த வங்கதேசம் நாட்டைச் சேர்ந்த பிலால் உசேன் (32) என்பவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டார்.
ஓமந்தூரார் மருத்துவமனை: பின்னர், அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதை யடுத்து அப்பிரிவு போலீஸார் பிலால் உசேன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன், கரோனா பரிசோதனைக்காக ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தனிப்படை அமைப்பு: ஆனால், அவர் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கொடுத்த புகாரின் பேரில், திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல் கட்டமாக தலைமறைவான பிலால் உசேனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில் செங்கல்பட்டில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.