சென்னை: ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 27 பவுன் நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை கொளத்தூர் டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (70). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்குச் சென்றார். பின்னர் 4 நாட்கள் கழித்து வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள், வெள்ளி பூஜைப் பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக புழல் போலீஸார் விசாரணை நடத்தி, எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த மோகன் (56) என்பவரைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரத்தை சேர்ந்த தினகரன் (35), ராமநாதபுரம் மாவட்டம் பனைக் குளத்தைச் சேர்ந்த செல்வக் குமார் (38) ஆகியோரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 27பவுன் நகைகள், 250 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.36,500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் ஏற்கெனவே சென்னை, தஞ்சாவூர், திருச்சி, திண்டிவனம், பெங்களூரு, ஓசூரில் வீடுகளில் திருடியதும், அவர்கள் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.