அகிலன், சுரேஷ்குமார் 
க்ரைம்

விழுப்புரம் | பள்ளி மாணவியை கொன்று புதைத்த காதலன்: உடந்தையாக இருந்த நண்பருடன் சிக்கினார்

செய்திப்பிரிவு

விழுப்புரம்: செஞ்சி அருகே 11-ம் வகுப்பு மாணவியை கொன்று புதைத்த காதலன், உடந்தையாக இருந்த அவரது நண்பர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சாலவனூர் சுடுகாடு பகுதியில் உள்ள ஏரியில் கடந்த 6-ம் தேதி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பள்ளம் தோண்டும் பணியின்போது, அழுகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து டிஎஸ்பி கவினா, கஞ்சனூர் போலீஸ் ஆய்வாளர் சேகர் விசாரணை நடத்தினர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையின் அறிக்கையில், 3 மாதம் கருவுற்ற நிலையில், ஒரு வளரிளம் பெண் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பான செய்திகள் நாளிதழ்களில் வந்த நிலையில், கொலை செய்யப்பட்டது விழுப்புரம் அருகே கண்டமானடியைச் சேர்ந்த 17 வயது சிறுமி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், சிறுமி 12-ம் வகுப்புக்கு செல்ல இருந்ததும், கோடை விடுமுறைக்காக அரியூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு வந்திருந்ததும் தெரியவந்தது.

மேலும், அவர் செஞ்சி அருகே சித்தேரிப்பட்டைச் சேர்ந்த அகிலன் (23) என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அகிலனை சென்னையில் நேற்று முன்தினம் இரவு போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “நாங்கள் இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தோம். நெருங்கி பழகியதில் சிறுமி கர்ப்பமடைந்தார். இதனால் திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார். திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து, சம்பவத்தன்று திருமாவாத்தூர் கோயில் அருகே வரச் சொன்னேன். அன்று இரவு எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆவேசமடைந்து தாக்கியதில் சிறுமி கீழே விழுந்து உயிரிழந்தார். பின்னர் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. போலீஸாரிடம் சிக்காமலிருக்க சடலத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்து விடலாம் என்று திட்டமிட்டேன்.

இதற்காக என்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களான கக்கனூரைச் சேர்ந்த சுரேஷ்குமார்(22), மேலும் ஒருவரை உதவிக்கு அழைத்தேன். அன்றிரவு பைக்கில் மாணவியின் உடலை நடுவில் உட்கார்ந்த நிலையில் வைத்துக் கொண்டு, சாலவனூர் சுடுகாடு அருகே கொண்டு சென்று புதைத்து விட்டோம். பல நாட்களாகிவிட்ட நிலையில், நாங்கள் போலீஸிடம் சிக்க மாட்டோம் என்று நினைத்திருந்தோம்” என்று அகிலன் தெரிவித்ததாக போலீஸார் கூறினர்.

இதையடுத்து, அகிலன், சுரேஷ்குமார் இருவரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT