சேலம்: சேலத்தில் பெண்ணின் ஆதார் கார்டைக் கொண்டு போலி ஆவணம் தயாரித்து முறைகேடு செய்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவன விநியோகிப்பாளரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த இளம்பெண் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் அளித்த புகார் மனுவில், எனது பெயரிலான ஆதார் கார்டு எண்ணை வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை இணைத்து போலியாக ஆவணம் தயாரித்து சிம்கார்டுகள் விற்பனை செய்து வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ எனவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து, சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் கைலாசம் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மாவட்ட விநியோகிப்பாளரான ஓமலூர் செட்டிப்பட்டி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவர், மாதாந்திர விற்பனை இலக்கை அடைய போலி ஆவணம் தயாரித்து முறைகேடாக சிம்கார்டு விற்பனை செய்து கமிஷன் பெற்று வருவது தெரியவந்தது. இதையடுத்து, சைபர் க்ரைம் போலீஸார் குமரேசன் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர். பின்னர், அவரை சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 3-ல் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
7 ஆண்டு சிறை: இதுகுறித்து சேலம் எஸ்பி சிவக்குமார் கூறியது: பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் நிறுவனங்கள் சாரா தனிமனிதர்களிடம் அரசு ஆவணங்கள் சம்பந்தப்பட்ட ஆதாரங்களையும், சான்றிதழ்களையும் சிம் கார்டு உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு வழங்கக் கூடாது.
மேலும், https://tafcop.dgtelecom.gov.in/index.php என்ற வலைதளத்தின் மூலம் பொதுமக்கள் தனது தனிப்பட்ட ஆதாரங்களை பயன்படுத்தி பெறப்பட்ட சிம்கார்டுகள் குறித்த விவரம் தெரிந்து கொள்ளலாம். அதுதொடர்பாக, ஆன்-லைன் மூலமாக புகார் தெரிவித்து முறைகேடான சிம்கார்டுகளை ரத்து செய்யலாம்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டுகளுக்கு குறையாத சிறைதண்டனை பெறத்தக்க வகையிலான சட்டப்பிரிவுகள் உள்ளன. இணையம் சார்ந்த குற்றம் மற்றும் பண இழப்பு ஆகியவை குறித்த புகார்களை 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவோ அல்லது ww.sybercrime.gov.in என்ற போர்டல் மூலமாகவோ காவல்துறைக்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.