க்ரைம்

திருமண தகவல் இணையதளம் மூலம் பெங்களூரு பெண்ணை ஏமாற்றிய டெல்லி இளைஞர் - 300 கிராம் நகை, பணம் திருட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 39 வயதான இவர் திருமண வரன் வேண்டி திருமண தகவல் இணையதளத்தில் பெயரைப் பதிவு செய்துள்ளார்.

15 நாட்களுக்கு முன்பு அன்ஷுல் ஜெயின் என்ற பெயரில் டெல்லி இளைஞர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள உறவினர் திருமண நிகழ்ச்சியில் அந்த பெண்ணை தனது குடும்பத்தாரிடம் அறிமுகம் செய்கிறேன் என்று கூறி அந்த பெண்ணை வரவழைத்துள்ளார்.

அவர் கூறியதை நம்பிய அந்த பெண், டெல்லிக்கு நகைகளுடன் திருமணத்துக்கு சென்றுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அந்தப் பெண்ணை வரவேற்று காரில் அழைத்து சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும், அந்த பெண்ணிடம் கார் டயரில் ஏதோ பிரச்சினை இருப்பது போல தெரிகிறது என்று ஜெயின் கூறியுள்ளார். அந்த பெண்ணும் கீழே இறங்கி கார் டயரை பரிசோதிக்க முயன்ற போது காருடன் அந்த நபர் தப்பியுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்துள்ளார். அதில், 300 கிராம் எடையுள்ள தங்க நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கம், செல்போன், ஆடைகள், ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவற்றை அந்த நபர் ஏமாற்றி எடுத்துச் சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT