கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பகுதி நேர வேலையில் அதிக வருவாய் தருவதாக கூறி கணினி பொறியாளர் உட்பட 3 பேரிடம், ரூ.38.30 லட்சம் மோசடி செய்தவர்களை, சைபர் கிரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆன்லைனில் புதுப்பது வழிகளில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம், பணம் இரட்டிப்பு, செயல்முறை கட்டணம் என பல்வேறு நூதன வழிகளில் பொதுமக்களிடம் பணம் பறிக்கப்படுகிறது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தோட்டகிரியை சேர்ந்த தனியார் கிரானைட் நிறுவன ஊழியர் சுரேஷ். கடந்த 16ம் தேதி, இவரது செல்போன் வாட்ஸ்-அப் எண்ணிற்கு வந்த குறுந்தகவலில், பகுதி நேர வேலை செய்தால், அதிக வருவாய் கிடைக்கும் எனவும், ஒரு டெலி கிராம் அக்கவுண்ட்டில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதில் தொடர்பு கொண்ட சுரேஷ், அவர்கள் கூறிய தகவல்படி, பல்வேறு நடைமுறை செலவுகளுக்காக ரூ.7.73 லட்சம் தொகையை வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார். இதன்பிறகு சுரேசிற்கு எவ்வித தகவலும் வரவில்லை. அதிர்ச்சியடைந்த சுரேஷ், அதில் குறிப்பிட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்ட போது, போன் சுவிட்ச் அப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸில், அவர் புகார் அளித்தார்.
இதேபோல் ஓசூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கங்கா ஈஸ்வரி (36). இவர், பகுதி நேர வேலையில் அதிக வருவாய் தருவதாக வாட்ஸ்-அப்-பில் வந்த தகவலை நம்பி, அவர்கள் கூறிய வங்கி கணக்குகளில் நடைமுறை செலவுகளுக்காக ரூ.5.85 லட்சம் பணத்தை அனுப்பி வைத்தார். எவ்வித தகவலும் வராததால், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.
ஓட்டல்களுக்கு மதிப்புரை: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவ லீலா (30). இவர சூளகிரி மில்லத் நகர் பகுதியில் தங்கி, பெங்களூரு தனியார் நிறுவனத்தில் கணினி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 23ம் தேதி, இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு வந்த குறுந்தகவலில், கூகுள் மூலம் தனியார் ஓட்டல்களுக்கு மதிப்புரை வழங்கும், பகுதி நேர வேலை செய்தால், அதிக வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை நம்பிய சிவலீலா, அவர்கள் கூறி வங்கி கணக்குகளுக்கு ரூ.24 லட்சத்து 72 ஆயிரத்து 254 தொகையை அனுப்பி வைத்தார். பின்னர், எவ்வித தகவலும் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிவலீலா, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். 3 புகார்கள் தொடர்பாக, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விழிப்புணர்வு தேவை: இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறும்போது, 'மோசடிகளில் ஏமாறாமல் இருக்க செல்போன் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யும் போது செயலின் நம்பகத் தன்மை, அதில் சுய விவரங்களை கொடுக்கலாமா என ஆராய வேண்டும். ஆன்லைனில் முதலீடு செய்யும் முன் நிறுவனத்தின் உண்மைதன்மையை அறிய வேண்டும்.
ஆன்லைனில், 99 சதவீத நிறுவனங்கள் போலியாக உள்ளன. நாம் செலுத்தும் பணத்திற்கு முதலில் லாபம் தருவது போல் பணம் கொடுத்து, முதலீடு செய்யும் பெரிய தொகையை ஏமாற்றி விடுவார்கள். எனவே ஆன்லைன் முதலீட்டை தவிர்ப்பது நல்லது. பான் கார்டு விவரங்களை பதிய செல்போனுக்கு எந்த வங்கியும் குறுஞ் செய்தி அனுப்புவதில்லை.
அவ்வாறு வருபவை அனைத்தும் போலியானது. ஆன்லைனில் கடன் வாங்குவதற்கு முன்பணம் கட்ட சொன்னால் அவர்களும் போலியாக இருக்க வாய்ப்புள்ளது. மேற்கண்ட வகைகளில் பொதுமக்கள் தங்கள் பணத்தை இழந்தால், 1930 என்கிற இலவச எண்ணில் புகார் அளிக்கவும். மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நேரிலும் புகார் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04343 -294755 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றனர்.