சென்னை: சென்னை வியாசர்பாடி, கல்யாணபுரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சேவிகா (34). அழகுக்கலை நிபுணராக பணி செய்து வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து மேற்கு மாம்பலம் தலையாரி தெருவில் உள்ள தனது தோழி வீட்டில் தங்கினார்.
நேற்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் தோழிகளுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி உள்ளார். பின்னர், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஆசி மற்றும் வாழ்த்து பெறுவதற்காக நேற்று அதிகாலை 4 மணி அளவில் பைக் டாக்ஸியில் முன்பதிவு செய்து வியாசர்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். வாடகை இருசக்கர வாகனத்தை மேற்கு மாம்பலம், திருவள்ளுவர் சாலையைச் சேர்ந்த ஆனந்தன் (34) என்பவர் ஓட்ட, சேவிகா ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து பயணித்தார்.
அண்ணாசாலை, காமராஜர் அரங்கம் அருகில் இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத டிப்பர் லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர்.
தகவல் அறிந்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் நிகழ்விடம் விரைந்து இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சேவிகா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இருசக்கர வாகனத்தை ஓட்டிய ஆனந்தன் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சேவிகா உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
விபத்து நிகழ்ந்த காட்சிகள் அனைத்தும் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய டிப்பர் லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.