க்ரைம்

திருச்சி | சிறுமியை பெங்களூருவுக்கு கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த காதலர் உட்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

திருச்சி: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, மணப்பாறையில் உள்ளதனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, சமூக வலைதளங்கள் வாயிலாக வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரத்தைச் சேர்ந்த அலி என்ற முபாரக் அலி(32)யுடன் சிறுமிக்கு நட்பு ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு முபாரக் அலி, மணப்பாறைக்கு வந்து, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்தச் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.

வேலைக்குச் சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பாதது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், மணப்பாறை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, முபாரக் அலி அந்தச் சிறுமியை, பெங்களூருவில் பிரியாணி கடையில் வேலை பார்க்கும் தனது நண்பர்களான பேரணாம்பட்டுவைச் சேர்ந்த நியாஸ்(32), சதாம் உசேன்(28)ஆகியோர் தங்கியுள்ள அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர், தனது நண்பர்களிடம் அந்தச்சிறுமியை ஒப்படைத்துவிட்டு, திருமணம் குறித்து குடும்பத்தினரிடம் பேசுவதாகக் கூறி பேரணாம்பட்டுக்கு முபாரக் அலி சென்றுள்ளார். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, நியாஸ், சதாம் உசேன் இருவரும் அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அந்தச் சிறுமி, செல்போன் மூலம் தனது குடும்பத்தினருக்கு தகவல்அளித்தார். இதுகுறித்து திருச்சி மாவட்டஎஸ்பி சுஜித்குமாரிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அவரது உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸார் உடனடியாக பெங்களூரு சென்று சிறுமியை மீட்டனர். மேலும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முபாரக் அலி, நியாஸ், சதாம் உசேன் ஆகியோரை பிடித்துமணப்பாறைக்கு அழைத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து, சிறுமி காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை மாற்றி, போக்சோ, கடத்தல், பாலியல் தொல்லை ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, முபாரக்அலி உட்பட 3 பேரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT