போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் நிலத் தகராறு காரணமாக இரு குடும்பத்தினரிடையே நேற்று ஏற்பட்ட மோதல் துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
மத்திய பிரதேசம் மொரேனா மாவட்டத்தில் உள்ள லெபா கிராமத்தில் ரஞ்சித் தோமர், ராதே தோமர் ஆகியோர் நீண்ட காலமாக வசித்து வந்தனர். இவர்களுக்கு இடையே பல ஆண்டுகளுக்கு முன்பே நிலத் தகராறு ஏற்பட்டது.
முன்விரோதம்: இது தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு ரஞ்சித் தோமர் மற்றும் ராதே தோமர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ரஞ்சித் தோமரின் கூட்டாளிகள், ராதேதோமர் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கொலை செய்தனர். அதன்பின் ரஞ்சித் தோமர் குடும்பத்தினர் லெபா கிராமத்தை விட்டு வெளியேறினர்.
இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றதால், அங்கு இரு குடும்பத்தினர் இடையே சமரச தீர்வு ஏற்பட்டது. அதன்பின் 9 ஆண்டுகள் கழித்து ரஞ்சித் தோமர் குடும்பத்தினர் சமீபத்தில் லெபா கிராமத்துக்கு மீண்டும் திரும்பினர்.
ஆனால், பழைய பகையை ராதே தோமர் குடும்பத்தினர் மறக்கவில்லை. ரஞ்சித் தோமர் குடும்பத்தினரை பழிவாங்க, ராதே தோமர் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இதற்காக 2 துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை வாங்கி தயார் நிலையில் வைத்திருந்தனர்.
இந்நிலையில் ரஞ்சித் தோமர் குடும்பத்தினர் மற்றும் ராதே தோமர் குடும்பத்தினர் இடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இரு குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் முதலில் கம்புகளால் தாக்கிக் கொண்டனர். அவர்களை விலக்கும் நடவடிக்கையில் அந்த வீட்டின் பெண்கள் ஈடுபட்டனர்.
சண்டை முற்றியதும், ராதே தோமர் குடும்பத்தை சேர்ந்த இருவர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளை கொண்டு வந்தனர். அதில் ஒருவர், ஒவ்வொரு குண்டாக போட்டு, ரஞ்சித் குடும்பத்தினரை சற்று தொலைவில் இருந்து நிதானமாக குறிபார்த்து சுட்டார்.
இதில் ரஞ்சித் குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள், அருகில் உள்ள காட்டு பகுதிக்கு சென்று பதுங்கி கொண்டனர். அவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
இச்சம்பவத்தை அடுத்து லெபா கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.