க்ரைம்

பத்திரப்பதிவு அதிகாரி வீட்டில் ரூ.8.82 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை குறளகம் வளாகத்தில் உள்ள பத்திரப் பதிவுத்துறை ஐஜி கட்டுப்பாட்டில் மாற்றுப்பணி, பத்திரப்பதிவு உதவி செயல் பொறியாளர் அலுவலகம் உள்ளது. சார்-பதிவாளர் அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் விற்பனை பத்திரங்கள் இங்கு ஆய்வுசெய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில், இந்த அலுவலகத்தில் உதவி செயல் பொறியாளராகப் பணிபுரிந்து வந்த ரமேஷ் மற்றும் இளநிலை உதவியாளர் விஜயகுமார் ஆகியோர், கூடுவாஞ்சேரி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட, வழக்கறிஞர் ஒருவரது வாடிக்கையாளரின் ஆவணத்தை ஆய்வு செய்து அனுமதி வழங்க, ஓர் ஆவணத்துக்கு ரூ.2 ஆயிரத்து 500 வீதம் 10 ஆவணத்துக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரத்தை பணத்தை, குறளகத்தில் அவர்களிடம் கொடுத்தபோது, போலீஸார் கையும் களவுமாகப் பிடித்தனர்.

பின்னர், இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர்களது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர்.

அப்போது, உதவி செயல் பொறியாளர் ரமேஷ் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.8,64,500 ரொக்கம் மற்றும் இளநிலை உதவியாளர் விஜயகுமார் வீட்டில் இருந்து ரூ.18 ஆயிரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், பணிக்காலத்தின்போது இவர்கள் சேர்த்த சொத்து விவரங்கள் மற்றும் வங்கி கணக்குகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT