க்ரைம்

மதுரை சித்திரை திருவிழாவின்போது இளைஞர் கொலை

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்புக்கு இடையே கூட்டத்தில் கும்பல் ஒன்று இளைஞரை கத்தி யால் குத்திக்கொலை செய்தது.

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று அதிகாலை 5.52 மணிக்கு நடந்தது. இதையொட்டி கோரிப்பாளையம், மதிச்சியம் பகுதியில் கள்ளழகரை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். பாதுகாப்புப் பணிக்கென ஏராளமான போலீஸாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு முன்னதாக அதிகாலை சுமார் 4 மணியளவில் மதுரை அரசு மருத்துவமனை பிணவறைக்குச் செல்லும் பகுதியில் இரு கோஷ்டியினர் மோதிக் கொண் டனர். 14 பேர் கொண்ட கும்பல் ஒன்று திருவிழா பார்க்க வந்த 5 பேரை வழி மறித்து தாக்கினர். இதில்ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப் பட்டார். கொலையாளிகள் உட னடியாக அங்கிருந்து தப்பினர்.

தகவல் அறிந்த மதிச்சியம் காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கொலையானவரின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பினர். விசாரணையில், கொலையுண்டவர் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை அடுத்த எம்கே.புரம் புளியந்தோப்பைச் சேர்ந்த ரத்தினம் மகன் சூரியா (எ) சூரிய பிரகாஷ் (23) எனத் தெரிய வந்தது.

மதிச்சியம் போலீஸார் வழக்குப் பதிந்து சிசிடிவி காட்சிகளை சேகரித்து கொலையாளிகளை தேடுகின்றனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், திருவிழாவுக்கு வந்த பெண் ஒருவரை கேலி செய்ததால் ஏற்பட்ட மோதலில் அவர் கொல்லப்பட்டார் என முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. இருப்பினும்,செயின் பறிப்பில் ஈடுபட்ட கும்பலைத் தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் சூரியபிரகாஷ் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கொலையாளிகளைப் பிடித்தால்தான் உரிய காரணம் தெரியும் ,’என்றனர்.

SCROLL FOR NEXT