க்ரைம்

துறையூர் அருகே இரு வேறு இடங்களில் 2 பேர் கொலை: டிஐஜி, எஸ்.பி நேரில் ஆய்வு

செய்திப்பிரிவு

திருச்சி: துறையூர் அருகே வெவ்வேறு இடங்களிலுள்ள பாலங்களின் அடியில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் ஒரத்த நாட்டைச் சேர்ந்த 2 பேர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள கொத்தம்பட்டியில் குண்டாற்றுப் பாலத்தின் கீழ் நேற்று ஒருவர் முகம், தலையில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகவலறிந்த துறையூர் போலீஸார் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதேபோல, கொத்தம்பட்டியிலிருந்து 5 கி.மீ தொலைவிலுள்ள பொன்னுசங்கம்பட்டி கிராமத்தில் கண்ணனூர் பாளையம் ஏரிக்குச்செல்லும் உபரிநீர் வாய்க்காலின் பாலத்துக்கு அடியில் மேலும் ஒருவர் கொலை செய்யப்பட்டுகிடப்பது நேற்று மாலை தெரியவந்தது. தகவலறிந்த ஜம்புநாதபுரம் போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது இந்த நபருக்கும் முகம், தலையில் படுகாயங்கள் இருந்தன.

எனவே, இரு கொலைச்சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதையடுத்து திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர், எஸ்.பி. சுஜித்குமார், முசிறி டிஎஸ்பி யாஸ்மின் உள்ளிட்டோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொத்தம்பட்டி பாலத்தின் கீழ் இறந்து கிடந்தவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள நெடுவாக்கோட்டையைச் சேர்ந்த இளங்கோவன் மகன் ஸ்டாலின் (40), பொன்னுசங்கம்பட்டியில் இறந்து கிடந்தவர் அதே ஊரைச் சேர்ந்த காத்தலிங்கம் மகன் பிரபு (40) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இது குறித்து டிஐஜி சரவண சுந்தரிடம் கேட்டபோது, “இருவரையும் வேறு எங்காவது கொலை செய்து, இங்கு கொண்டு வந்து பாலத்தின் மேல் பகுதியிலிருந்து உருட்டி விட்டுள்ளது போல தெரிகிறது. 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

SCROLL FOR NEXT