க்ரைம்

திரைப்பட இயக்குநர் பாண்டிராஜிடம் ரூ.1.89 கோடி மோசடி செய்தவர் கைது

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: திரைப்பட இயக்குநர் பாண்டிராஜிடம் நிலம் வாங்கித் தருவதாகக் கூறியும், கடனாக பெற்றும் ரூ.1.89 கோடி மோசடி செய்தவரை புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விராச்சிலையைச் சேர்ந்தவர் சி.பாண்டிராஜ். பசங்க, வம்சம், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட திரைப் படங்களை இயக்கியுள்ள இவர், சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது நண்பர், புதுக்கோட்டை பூங்கா நகரைச் சேர்ந்த நா.குமார் (49). இவர், புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் 23 சென்ட் நிலத்தை ரூ.40 லட்சத்துக்கு பாண்டிராஜூக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

இயக்குநர் பாண்டிராஜ்

அதே பகுதியில் 56 சென்ட் நிலத்துக்கு ரூ.27 லட்சத்தை வாங்கிக் கொண்டு கிரையம் செய்து கொடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் பகுதியில் ஒரு இடத்தை வாங்கித் தருவதாதக் கூறி ரூ.1 கோடி பெற்றுள்ளார். அத்துடன், பாண்டிராஜிடமிருந்து பல்வேறு தவணைகளாக ரூ.15 லட்சம் கடனும் வாங்கியுள்ளார்.

இவ்வாறாக கடந்த 10 ஆண்டுகளில் பாண்டிராஜிடமிருந்து குமார் ரூ.1.89 கோடியை வாங்கி மோசடி செய்தது தொடர்பாக, புதுக்கோட்டை குற்றப் பிரிவு போலீஸில் இயக்குநர் பாண்டிராஜ் அண்மையில் புகார் அளித்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து குமாரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT